ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னிறுத்தி நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன என்று குற்றஞ்சாட்டினார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் பேசிய அவர், நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் ‘எஸ்.ஐ.ஆர்.’ (Special Intensive Revision) சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என டில்லியில் தொடர்ச்சியான போராட்டங்களும் நடந்ததாக அவர் சுட்டினார்.
இளைஞர்களை முன்னிறுத்தி தேர்தல் கமிஷனை குறிவைத்து நடத்தப்படும் போராட்டங்கள் மூலம் கொந்தளிப்பை உருவாக்கி நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன என ராஜ்நாத் சிங் கூறினார். தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய இளைஞர்களின் ஆற்றலை அரசியல் மோதல், குழப்பம் நோக்கி திருப்ப காங்கிரஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் முயல்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சிலர் வங்கதேச நிகழ்வுகளை முன்மாதிரியாக கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த விரும்புவதாகவும், மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என சிலர் வெளிப்படையாக அறைகூவல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டங்கள் தேர்தல் சீர்திருத்தங்களுக்கோ, எஸ்.ஐ.ஆர். பணிக்கோ, அல்லது தலைமை கமிஷனரை நீக்குவதற்கோ அல்ல; அரசியல் ஆதாயத்திற்காக குழப்பம் உருவாக்கும் முயற்சியே என அவர் கூறினார்.
ஜனநாயக அமைப்புகளை அரசியல் லாபத்திற்காக சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குழப்ப அரசியலை விட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.




