தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றும் முயற்சியாக, இம்மாத இறுதியில் பார்லிமென்டில் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 33% இடஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே அமலுக்கு வரும் நிலையில், 2029 லோக்சபா தேர்தலுக்குள் அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்ய முடிவு செய்ததாகவும் தகவல்.

மறுவரையறையை முன்னெடுக்க அரசியலமைப்பின் 131வது திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கட்டாயம். காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மசோதா ஏப்ரலில் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. ஜூலை–ஆகஸ்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடக்கவில்லை; ஆகஸ்ட் 13ல் முடிந்த கூட்டத்தொடர் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்படாததும், போதுமான எண்ணிக்கை திரட்டிய பின் மீண்டும் முயற்சிக்கவே என கூறப்படுகிறது.

லோக்சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்களில் மூன்று இடங்கள் காலியாக உள்ள நிலையில், தேஜ கூட்டணிக்கு 318 எம்.பி.க்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது; மசோதா நிறைவேற 360 ஓட்டுகள் தேவை. திமுகவின் 22 எம்.பி.க்கள் ஆதரித்தால் எண்ணிக்கை 340 ஆக உயரும்; இன்னும் 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும். ராஜ்யசபாவில் 245 இடங்களில் மூன்று காலியாக உள்ள நிலையில், 240 பேரில் தேஜ கூட்டணிக்கு 153 பேர் உள்ளதாகவும், மசோதாவுக்கு 162 ஆதரவு தேவைப்படுவதால் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. மசோதாவுக்கு ஆதரவு பெற திமுகவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.