டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், சாலையில் அதிவேகமாகச் செல்லும் திறனுடன், குறுகிய தூரம் காற்றில் மேலே எழும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘ரோட்ஸ்டர்’ என்ற புதிய காரை நேற்று அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில், காரின் செயல்விளக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக செங்குத்தாக மேலே சென்று உட்புறமாக திரும்பும் வகையில் ஒரு பாதை அமைக்கப்பட்டிருந்தது.

செயல்விளக்கத்தில், காரின் அடிப்பகுதியில் உள்ள உறிஞ்சு விசை தொழில்நுட்பம் மூலம் செங்குத்தான பாதையில் ஏறி, சில விநாடிகள் தலைகீழாகவும் நிலைத்திருந்தது. பின்னர் அந்தரத்தில் சுழன்று சில விநாடிகள் பறந்து, அதிவேக காற்று உந்து விசை உதவியுடன் தரையிறங்கியது.

இந்த சோதனையில் காருக்குள் ஓட்டுநர் இல்லை. உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்க ஓட்டுநர் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதாக மஸ்க் தெரிவித்தார்.

மேலும், ‘ரோட்ஸ்டர்’ கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ. வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் கொண்டதாகவும், 10 உந்து முனைகள் மற்றும் மிக உயர் அழுத்த காற்றழுத்த தொட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். 2028ல் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தாலும், நீண்ட தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் குறித்து இதுவரை ஆதாரங்கள் வெளியாகவில்லை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.