சென்னை: ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காரணமாக காலியான தொகுதிகளுக்கான வரவிருக்கும் இடைத்தேர்தல்களில், த.வெ.க. புதிய அணுகுமுறையை பரிசீலித்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயகுமார், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததால் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகின.
இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்கனவே முடிந்துள்ளது. ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் களமிறக்கியதால் பிரசாரத்தில் நெருக்கடி ஏற்பட்டதாகவும், முதல்வர் விஜய் கிராமம் கிராமமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட் வழங்க வேண்டுமா என்ற கேள்வியை த.வெ.க. மீண்டும் பரிசீலிக்கிறது. அதற்கு மாற்றாக, வாரியத் தலைவர் பதவிகளை ஏற்குமாறு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இரண்டு விஜயபாஸ்கர்களும் இசக்கி சுப்பையாவும் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சமரசப்படுத்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





