நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடல் வழியாக இலங்கைக்கு மெத்தபெட்டமைன் கடத்த முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், த.வெ.க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் அவரது நண்பரும் மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடல் வழியாக நகர்த்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தியது.

அந்த நடவடிக்கையில், சர்வதேச கடத்தல் நபர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பூபாலன் என்பவர் கடத்தல் கும்பலில் முக்கியப் பங்கு வகித்ததாக தெரியவந்ததாக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. வழக்கறிஞராக பணியாற்றும் பூபாலன், த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கட்சி நடவடிக்கையாக த.வெ.க. மாவட்ட செயலாளர் சுகுமார் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, பூபாலனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார்.