ஒட்டாவா: கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அமைந்துள்ள, நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தளத்தில் சுமார் 690 ராணுவ வீரர்களும் 300 அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.
1950களில் கொரியப் போரின் காலத்தில் கனடா வீரர்களுக்கான பயிற்சி முகாமாக செயல்பட்ட இந்த தளத்தில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
தீ முதலில் பயிற்சிப் பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக ராயல் கனடா போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விபத்துக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தைரியமிக்க ராணுவ வீரர்களும் வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அல்பெர்ட்டா மாகாண அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.





