பீஹாரில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள (ஜே.டி.(யு)) கட்சியின் எம்.எல்.ஏ. அனந்த் சிங், நிதிஷ் குமார் அரசியலில் திணறிய காலத்தில் அவருக்கு உதவ “ஒன்பது பேரை தீர்த்துக் கட்டினேன்” என செய்தியாளர்களிடம் கூறியதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம், பீஹார் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள எட்டு இடங்களுக்கு அக்டோபர் 23-ல் நடைபெற உள்ள தேர்தல் சூழலில் எழுந்துள்ளது. தன் அரசியல் எதிரியான நீரஜ் குமாருக்கு கட்சி சீட் வழங்கியதால், பாட்னா மாவட்டத்தின் மோகாமா தொகுதி எம்.எல்.ஏ.வும் மூத்த தலைவருமான அனந்த் சிங் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அனந்த் சிங்கின் பேச்சு இடம்பெற்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மாநில அரசியலில் பரபரப்பை அதிகரித்தது. இதற்கு பதிலளித்த ஜே.டி.(யு) மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன், அந்த கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும், நிதிஷ் குமாருக்கு களங்கமற்ற அரசியல் வரலாறு உள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அனந்த் சிங் தன் பேச்சை திரும்ப பெற்றார். லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக் காலத்தில் தன் ஆதரவாளர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டதை நினைவூட்டவே சொன்னதாகவும், தன் வார்த்தைகளை ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தவறாக புரிந்து கொண்டு திரித்து கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்.ஜே.டி) செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ், அனந்த் சிங்கின் பேச்சு நிதிஷ் குமாரின் அரசியல் எழுச்சியில் குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பு இருந்ததாக காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.