சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது பெய்த கனமழையால், பல பகுதிகளில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். மழையளவு 30 செ.மீ. வரை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 6 மணியளவில் லேசாக தொடங்கிய மழை, படிப்படியாக வேகம் எடுத்து நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. வடசென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததாக கூறப்படுகிறது.

வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காரணமாக மேகக்கூட்டம் அதிகமாக திரண்டதால் நள்ளிரவு வரை கனமழை நீடித்ததாக தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு 12 செ.மீ. வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மீறி 30 செ.மீ. வரை மழை பெய்துள்ளது என்றும் கூறினர். மேலும் மழை தொடர வாய்ப்புள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மீட்புக்குழுவினர் உஷார் நிலையில் உள்ளதாகவும், காரணமின்றி வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.