சென்னையின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் வடசென்னையின் சில பகுதிகளில் தீவிர மழை பதிவானது.

அறிக்கையின் படி, அதிகபட்சமாக பாரிமுனையில் 361 மிமீ மழை பதிவானது. எதிர்பாராத அளவில் மழை பெய்ததால், இது மேகவெடிப்பாக இருக்கலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.

ஆனால், இந்த மழை மேகவெடிப்பால் ஏற்பட்டது இல்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வட தமிழகத்திலும் அதனை ஒட்டிய தென்கடலோர ஆந்திராவிலும் மேலடுக்கு சுழற்சி நிலவியதாகவும், வெப்பச்சலன மேகங்கள் உருவாகி தீவிரம் அடைய வளிமண்டலத்தில் இருந்த சாதகமான சூழல்களே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழைக்கு காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தது.

மேகவெடிப்பு எனக் கருதப்படுவதற்கு 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு அதிகமாக மழை பெய்ய வேண்டும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டது. நிலவிய வானிலைச் சூழல் மற்றும் மழையின் தன்மையை கணித்து பார்க்கும்போது மேகவெடிப்பு ஏற்படவில்லை என முடிவெடுத்ததாக தெரிவித்தது.