சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை எழும்பூர், புதுப்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் நிலவரத்தை விளக்கினார்.

குறுகிய நேரத்தில் எதிர்பாராத அளவில் கனமழை பெய்ததாக அவர் கூறினார். 20க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதாகவும், மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களைப் பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சாலை மட்டத்தை விட பள்ளத்தில் உள்ள சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததாகவும், சில இடங்களில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மழைநீர் வடிந்த பிறகு சுகாதார பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மழை பாதிப்பு குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் விஜய்க்கு தகவல் அளித்து வருவதாகவும், முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணிகள் ஒதுக்கப்பட்டு துரிதமாக செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.