அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ள நிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் அறிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, இன்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கை தொடர்கிறது. மழை தொடர்பான பாதிப்புகளை உடனடியாக கையாள தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனடி தீர்வு காணவும், மழைநீர் அகற்றும் பணிகளை 15 மண்டலங்களிலும் களத்தில் சென்று பார்வையிடவும், பொறுப்பு அமைச்சர்கள் 8 பேரும் உடனே சென்னை வர வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நிருபர்களிடம் பேசுகையில், கனமழையை சமாளிக்க மாநகராட்சி தயார்நிலையில் இருப்பதாக கூறினார். மழை பாதிப்பு நிலவரங்களை முதல்வர் விஜய் கண்காணித்து வருவதாகவும், மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.





