சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தார். த.வெ.க. தலைவர் மற்றும் முதல்வர் விஜய் விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்றதுடன், டில்லி திரும்பும் போது சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து வழியனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உபசரிப்பு பிரதமரை மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் பாதுகாப்புக்காக எஸ்.பி.ஜி. (சிறப்பு பாதுகாப்பு குழு) சார்ந்த 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.

அவர்களில் சிலர் முதல்வருடன் உரையாடியதாகவும், சிலர் ‘செல்பி’ எடுத்ததாகவும் தகவல். உரையாடலின்போது ஒவ்வொரு அதிகாரியின் பெயரும் அவர்களின் ஊரும் என்னவென்று முதல்வர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் சமூக வலைதளத்தில் விஜயின் ஆங்கில உச்சரிப்பை பாராட்டி பதிவிட்டிருந்தார். ஆனால் பிரதமருடன் வந்த அதிகாரிகள், விஜய் ஹிந்தியையும் புரிந்து கொண்டு ஓரளவு ஹிந்தியில் பதிலளித்ததாக கூறி, அந்த விஷயம் பதிவில் குறிப்பிடப்படாதது குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.