மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோவில் அருகே நின்றிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 39 பேர் காயமடைந்தனர்.

நவராத்திரி விழாக்காலம் என்பதால் நள்ளிரவில் கோவிலில் அதிகமான மக்கள் கூடியிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து நேரத்தில் கோவில் அருகே பலர் நின்றிருந்ததாக தகவல்.

நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், நெல் ஏற்றிய அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் இருந்ததாகவும், வேகமாக வந்து கூட்டத்தில் மோதியதாகவும் தெரிவித்தனர். மோதலின் தாக்கத்தில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறினர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.