சென்னை: மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து, அம்மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜயிடம் விளக்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் பிரதமரை தனியாக சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசியதாகவும், மாநில–மத்திய ஒருங்கிணைப்பின் பயனை ஆந்திராவில் நேரில் பார்த்து அறியுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் விஜயவாடா சென்று கனகதுர்க்கை அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், கோதாவரி–கிருஷ்ணா–காவிரி நீர் இணைப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு முறைப்படி நீர் திறப்பது தொடர்பாக விஜய் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், மத்திய அரசின் நிதி மற்றும் ஆதரவுடன் ஆந்திராவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நாயுடு பட்டியலிட்டு கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு பணிகள், போலாவரம் தேசிய நீர்ப்பாசன திட்டம், ரூ.10,134 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் மற்றும் 74 ரயில் நிலைய திட்டங்கள் ஆகியவை இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குப்பம் உள்ளிட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் திட்டங்களும் குறிப்பிடப்பட்டதாக தகவல்.

இதேபோல் தமிழக அரசும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் பல திட்டங்கள் கிடைக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் துறைகள் வாரியாக மத்திய நிதி மற்றும் புதிய திட்டங்களை பெறுவதற்கான தயாரிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.