திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், சாலையோரம் நின்றிருந்த தம்பதியின்மேல் சொகுசு கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கோட்டையூரைச் சேர்ந்த ஊராட்சி செயலர் செந்தில்வேல் (55) மற்றும் அவரது மனைவி மதிவதனி (45). செந்துறையில் நடந்த உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, மகள் ஹரிணியுடன் வீட்டிற்கு செல்ல சாலையோரம் நின்றிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிங்கம்புணரியைச் சேர்ந்த சேவுகப்பெருமாள் (38) ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் செந்தில்வேல் மற்றும் மதிவதனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஹரிணியை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர் தப்பிக்க முயன்றபோது, செந்தில்வேலின் உறவினர்கள் அவரையும் அவரது நண்பர் மசூத் (25) உள்ளிட்ட மூவரையும் மடக்கிப் பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த நத்தம் போலீசார் சேவுகப்பெருமாளை கைது செய்தனர்.