பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில், விடுதியில் உருவாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாய பயன்பாட்டிற்கு மாற்றும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

பல்கலை வளாக விடுதியில் சுமார் 15 ஆயிரம் மாணவ–மாணவியர் தங்கி படிப்பதாக நிர்வாகம் தெரிவித்தது. குளியல் மற்றும் துணி துவைப்பில் பயன்படுத்தப்பட்ட நீர் முன்பு நிலத்தில் கலந்து வீணாகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க, வளாகத்தின் 60 இடங்களில் இருந்து வீணாகும் கழிவுநீரை சேகரித்து ‘சீவேஜ் ட்ரீட்மென்ட் சிஸ்டம்’ மூலம் சுத்திகரிக்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாய் வழியாக நேரடியாக பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படுகிறது.

சுமார் 1 ஏக்கர் பரப்பளவில், 11 அடி ஆழத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு, இதில் 2.50 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர், வளாகத்தில் வேளாண் கல்லூரி சார்பில் நிர்வகிக்கப்படும் 80 ஏக்கர் நிலத்தில் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், குட்டையில் சேமிக்கும் நீரில் நுண்ணுயிர்கள் அதிகம் இருப்பதாகக் கூறி, அங்கு மீன்களும் வளர்க்கப்படுகின்றன. மீன் கழிவுகளில் நைட்ரஜன் அதிகம் இருப்பதால், இந்த நீரை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தி அதிக சாகுபடி பெற முடிகிறது என நிர்வாகம் தெரிவித்தது.