தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறி, பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட குழு, மத்திய பாஜ தலைமையிலான அரசை அகற்றுவதே தங்களின் ஒரே நோக்கம் என முழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸில் பதிவு வெளியிட்டு பதிலளித்துள்ளார். அதில், “இந்தியா வங்கதேசம் அல்ல; இந்திய இளைஞர்கள் முட்டாள்கள் அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய மாணவர்கள் நாட்டை அழிப்பவர்கள் அல்ல; அதை கட்டமைப்பவர்கள் என அவர் கூறினார். உண்மையான மாணவர்கள் பதக்கங்கள் வெல்வது, திறன் மேம்பாடு, புத்தாக்கம், ஸ்டார்ட் அப், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கி, கலாசார அடையாளங்களாகவும் உருவாகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த பதிவுடன் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.





