தஞ்சாவூரில் உள்ள சமுத்திரம் ஏரி சுமார் 287 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 1,186 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. ஆண்டுதோறும் இங்கு பல்வேறு வகையான உள்ளூர் மற்றும் வலசைப் பறவைகள் வருவது வழக்கம்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து, அரூர்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், 15க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டனர்.
அந்த கணக்கெடுப்பில் அன்றில், நீர்க்காகம், சிறிய விசில் வாத்து, புள்ளிமூக்கு வாத்து, முக்குளிப்பான், நத்தை கொத்தி நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 63 வகையான பறவை இனங்கள் இருப்பது பதிவானது.
அரூர்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார், இத்தகைய பன்முகத்தன்மை நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது என்றும், பறவைகளின் வாழிடங்கள் சீர்குலையாமல் இருக்க அரசு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்கள், குடியிருப்புகள், பூங்கா, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற காரணங்களால் ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளதாகவும், குப்பை மற்றும் கழிவுகளால் நீரின் தரம் பாதிக்கப்படுவதாகவும் ஆர்வலர்கள் தெரிவித்தனர். குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் ஏரியில் கலப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்; நீர்வாழ் உயிரினங்களும் பறவைகளும் அதிகளவில் வர ஏற்ற சூழலை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.




