புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, ‘இண்டி’ கூட்டணி உள்ளிட்ட குழுக்கள் டில்லியில் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘இண்டி’ கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முதல்வருமான டி.கே. சிவகுமாரும் பங்கேற்றார்.

கூட்ட நெரிசலில் சிவகுமார் ராகுல் அருகே செல்ல முயன்ற போது அவர் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த குழப்பத்தில், தன் கையில் இருந்த கைக்கடிகாரம் காணாமல் போனதை பின்னர் அவர் கவனித்ததாக தகவல்.

சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அந்த கடிகாரம், முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. அது தள்ளுமுள்ளில் கீழே விழுந்ததா அல்லது யாராவது எடுத்தார்களா என்பது தெளிவில்லை; நெரிசல் காரணமாக அங்கேயே தேடவும் முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.