புதுடில்லி: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கைக்கோள் இணைய நிறுவனம் ‘ஸ்டார்லிங்க்’, இந்தியாவில் பாதுகாப்பான இணைய சேவையை வழங்க அரசு ஒப்புதலுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்பான விவாதங்களுக்குப் பின்னணியில் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைவதை ரிலையன்ஸ் தடுக்க முயல்கிறது என எலான் மஸ்க் முன்பு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ரிலையன்ஸ், போட்டிக்கு ஒருபோதும் அஞ்சியதில்லை என்றும், இந்தியாவில் செயல்படும் எந்த நிறுவனமும் நாட்டின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கொள்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில், இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க தயாராக இருப்பதாக ஸ்டார்லிங்க் தெரிவித்தது. மேலும், இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், தொழில் துறையினர் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பணியாற்றியதாக கூறியது.
வாடிக்கையாளர்களின் இணைய போக்குவரத்தை பாதுகாப்பாக கையாளும் வகையில், நாட்டுக்குள்ளேயே பிரத்யேக நெட்வொர்க் அமைப்புகள், கேட்வேக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அவை தேவையான அரசு ஒப்புதல்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.





