சென்னை: மத்திய அமைச்சர் பதவியும் கவர்னர் பதவியும் பெற தமிழக பா.ஜ. தலைவர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். அந்த பதவிக்காலம் 2030 ஏப்ரல் 2 வரை இருந்ததாக கூறப்படுகிறது.
விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முருகனுக்கு பதிலாக தமிழக பா.ஜ.வில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும், அவர் மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒரே நேரத்தில் கவர்னர்களாக இருந்ததாக கட்சி வட்டாரங்கள் நினைவூட்டுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் கவர்னராக இல்லாத நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாகிய பிறகு, தமிழக பா.ஜ. மூத்த தலைவர் ஒருவருக்கு கவர்னர் நியமனம் கிடைக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, நயினார் நாகேந்திரன், வானதி, தமிழிசை, தேசிய செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் பதவிக்காக முயற்சிக்கின்றனர். கவர்னர் பதவிக்காக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள் என கூறப்படுகிறது. இதற்காக கட்சி மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை அணுகி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பரிந்துரைக்குமாறு சிலர் கோரிக்கை விடுப்பதாக ஒரு பா.ஜ. நிர்வாகி தெரிவித்தார்.




