அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான ஆவணங்கள் குறித்து தமிழக அரசு முக்கிய விளக்கத்தை வெளியிட்டு, பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்ட அரசாணையில், தகுதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கு திருமணத்தின் போது 22 காரட் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் ஆதார் எண் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். ஆதார் இல்லாதவர்கள் அல்லது இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், UIDAI இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு மையங்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதிவு மையங்கள் அருகில் இல்லாததால் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், வசதியான இடங்களில் பதிவு முகாம்களை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாருக்கு விண்ணப்பித்து எண் ஒதுக்கப்படும் வரை, ஆதார் பதிவு சீட்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைஉறுதி திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம், டிரைவிங் லைசென்ஸ், அரசு அதிகாரி/வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை போன்ற மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்; அவை சரிபார்க்கப்படும்.
மேலும் கைரேகை தரம் குறைவால் ஆதார் அங்கீகாரம் பெற சிக்கல் ஏற்பட்டால் கருவிழி பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என அரசாணை கூறுகிறது. இம்முறைகளிலும் முடியாத சூழலில் ஆதார் கடிதத்தில் உள்ள QR கோடு மூலம் சரிபார்த்து பயன்களை வழங்கலாம் என்றும், அனைத்தும் தோல்வியடைந்தால் மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





