சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோல்கட்டாவில் இருந்து 184 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மும்பை, பெங்களூரு, டில்லி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை ஓய்ந்த பிறகு, அவை ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, பிராங்க்பர்ட், அபுதாபி போன்ற இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களும், திருச்சி, டில்லி, மும்பை, பெங்களூரு செல்லும் உள்நாட்டு விமானங்களும் 1 முதல் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.

மேலும், விமான நிலையத்தின் ‘போர்டிக்கோ’ பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.