சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை தற்போது வாபஸ் பெற்றுள்ளது.
இதற்கு முன் திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல இடங்களில் மழை பதிவாகி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணிகளுக்காக வேளச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) ஒரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன.
வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விழுப்புரத்திலிருந்து 1,000 டிராக்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையத்தின் புதுப்பிப்பு அறிக்கையில், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசை நோக்கி நகர்ந்ததால், சென்னைக்கு கணிக்கப்பட்ட மழை வாய்ப்பு தற்போது இல்லை என கூறி ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தது. அதே நேரத்தில் சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரக்கூடும் என்றும் குறிப்பிட்டது.





