தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய மூன்றாம் நாளிலேயே சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. ‘எல் நினோ’ தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்திருந்தது.

சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் சிரமத்துடன் சென்றன. சில இடங்களில் இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றின. விவசாய டிராக்டரில் பொருத்திய மோட்டார்களும் பயன்படுத்தப்பட்டன. மேலும், திங்களன்றும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், முதல்வர் விஜய் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சி தலைமையகத்திற்கு சென்று அவசர கால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை கண்காணிப்புக்காக சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தொடர் விடுமுறையையொட்டி பலர் வெளியூர் சென்றதாகவும், இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வெளியூர் சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்னைக்கு திரும்ப அரசு அவசர உத்தரவு பிறப்பித்தது.