ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்வதும், சவுதி அரேபியா மீது ஹவுதி படைகள் நடத்தும் தாக்குதல்களும், அமெரிக்கா–ஈரான் போரும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தானுக்கு சென்று பின்னர் இந்தியா வர உள்ள நிலையில் அவர் கூறுகையில், இத்தகைய சூழலில் இந்தியா போன்ற நாடுகள் கிடைக்கும் மாற்று வழிகளின் மூலம் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து வருவதாக குறிப்பிட்டார். அதனால் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை “ஒரே இரவில்” நிறுத்துவது இந்தியாவுக்கு கடினம் என்றார்.

இதற்கிடையில், நாட்டின் நலனை காரணமாகக் காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து ரஷ்யா மீதான தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், அமெரிக்காவில் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன் தொடர்புபடுத்தி, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் நிறைவேற்றியதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ‘லின்ட்ஸி ஓ கிரஹாம்’ சட்டத்தின் கீழ், தேசிய நலன் கருதி சில விலக்குகள் பரிசீலிக்கப்படுவதாக ரூபியோ கூறினார். ரஷ்யா மீதான தடைகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீதான வரிகள் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்ய 60 நாட்கள் வரை அவகாசம் டிரம்ப் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.