பிரான்சில் விலைவாசி உயர்வு, பொது சேவைகளின் தரம் குறைதல், சமத்துவமின்மை ஆகியவற்றை கண்டித்து அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்கின்றன. லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்ட நிலையில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் பதிவாகின.
லிமோஜஸ் நகரத்தில் 140 ஆண்டுகள் பழமையான டவுன் ஹால் கட்டடத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. வங்கிகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
போராட்டங்களில் அத்துமீறியதாகக் கூறி 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்தார்.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மேக்ரான், நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுபவர்களையும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி சூறையாடுபவர்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என்றார். கட்டுக்கடங்காத வன்முறைக்கு எந்த காரணமும் நியாயமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
வன்முறைகளுக்குப் பின்னால் தீவிர இடதுசாரி குழுக்களும் குற்றவாளிகளும் இருப்பதாகக் குற்றம்சாட்டிய மேக்ரான், கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடமிருந்து இழப்பீடு வசூலித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்படும் என்றார். இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கவலைகளை அரசு உணர்ந்து கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் மக்களின் பாதிப்புகளைச் சரி செய்ய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தலைமையில் அவசர நெருக்கடிக் குழு செயல்படும் என்றும் தெரிவித்தார்.





