நாகப்பட்டினத்தில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் (மெத்) போதைப் பொருளின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பறிமுதல் நடவடிக்கையை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மேற்கொண்டது.
நாகை மாவட்டத்தின் கடலோர கிராமம் ஒன்றிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அக்டோபர் 16 மற்றும் 17 தேதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரகசிய சோதனைகளை நடத்தினர். அப்போது 6 பெரிய பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன; ஒவ்வொன்றும் வெள்ளித்தகடுகளால் சுற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு பொட்டலமும் சுமார் 5 கிலோ எடையுடன் இருந்ததாகவும், அதில் அதிக வீரியம் கொண்ட மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளை நிறப் பொருள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 137 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோரத்திலிருந்து படகில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வேறு படகுக்கு மாற்றி இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்தேகநபருடன் தொடர்புடைய இடத்தில் நடந்த சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், அது போதைப் பொருள் விற்பனையில் கிடைத்த பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பூபாலன் வக்கீலாகவும், ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவராகவும் குறிப்பிடப்பட்ட நிலையில், அவரது இடத்துடன் பறிமுதல் சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





