தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் அதிகரித்ததற்கு திமுகதான் காரணம் என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். சென்னை நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெத்தபெட்டமைன் சப்ளை திமுக ஆட்சிக் காலத்தில் வேரூன்றியதாக கூறினார்.

போதைப்பொருள் பரவலால் மாநிலம் மோசமான நிலைக்கு சென்றதாகவும், இதை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் அரசின் முக்கிய கவனம் எனவும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தனித்துறை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

யார் தொடர்புடையவராக இருந்தாலும், 100 சதவீதம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.

மின்துறை தொடர்பாக, வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாகவும், டெண்டர் மூலமாகவே ஒப்பந்த நியமனங்கள் நடைபெறும் எனவும் கூறினார்.

சென்னையில் 600 முதல் 1,000 மின் மாற்றிகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீட்டர் ரீடிங் பணிக்கான பணியாளர்கள் குறைவாக இருப்பதால் கூடுதலாக 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.