புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, 137 முக்கிய புற்றுநோய் மருந்துகளை மத்திய அரசு நேரடி விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்து, வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சிகிச்சைக்கான மருந்து செலவு நோயாளிகளுக்கும் குடும்பத்தினருக்கும் பெரிய பொருளாதார சுமையாக இருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது. தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைக்க விலைக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் (NLEM) வெளியிடப்படுகிறது; இதில் உள்ள மருந்துகளுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) விலை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும், பட்டியலில் நேரடியாக இல்லாத சில மருந்துகளின் விலையையும் அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுகாதாரத் துறை நிபுணர் குழு ஆய்வில், சில புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் இரண்டு முதல் ஏழு மடங்கு வரை கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ‘நிவோலுமாப், ஒலாபரிப், டெனோசுமாப்’ உள்ளிட்ட 137 மருந்துகள் விலை கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டு, லாப வரம்பு 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது; இதனால் அதிகபட்ச சில்லரை விலை 70% வரை குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை குறைப்பு நவம்பர் 9 முதல் அமலுக்கு வரும். நிறுவனங்கள் ஏழு நாட்களுக்குள் திருத்தப்பட்ட விலைப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு, மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மருந்துகள் பெரும்பாலும் மருத்துவமனைகள் வழியாக வழங்கப்படுவதால், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதிய விலையில் விற்பனை நடைபெறுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உற்பத்தி தொடர வேண்டும் என்றும், விதிமீறி கூடுதல் விலைக்கு விற்றால் அந்த தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2019ல் 42 புற்றுநோய் மருந்துகளுக்கு இதேபோல் லாப வரம்பு விதிக்கப்பட்டதில் ஆண்டுக்கு ரூ.984 கோடி மிச்சமானதாகவும், தற்போதைய நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மிச்சமாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.