திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளப் பதிவின் மூலம் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கொலைச் சம்பவங்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் நிர்வாக அலட்சியத்தால் தொடர்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்டு வந்த ஒருவர், மனைவி முன்னிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா என தாம் முன்பே கேள்வி எழுப்பியதாகவும், சிவகங்கையில் நடந்த மற்றொரு கொலை சம்பவம் உருப்படியான நடவடிக்கை இல்லை என்பதைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த மதன் என்ற ரவுடி கொல்லப்பட்டதாகவும், இது முழுமையாக காவல்துறையின் அலட்சியத்தால் நடந்ததாகவும் அவர் கூறினார். பெருந்துறை அருகே ஒரு நர்ஸ் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது சடலம் ஐந்து நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பின் நிர்வாகிகள் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். வேதாரண்யத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ‘மெத்’ தொடர்பான வழக்கில் ஒரு நிர்வாகி கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியவில்லையா, அல்லது ஆளும் கட்சி தொடர்பு காரணமாக கண்டும் காணாமல் விட்டார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள்களை கட்டுப்படுத்த முதலில் தன் கட்சியினரை முதல்வர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்காக காவல்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறையை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு, உரிய கவனம் செலுத்தவில்லை என விமர்சித்த அவர், “ஓய்வை விட்டுவிட்டு உங்கள் துறையைக் கையில் எடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.