மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்களை முதல்வர் விஜய் சனிக்கிழமை அறிவித்தார்.
மதுராந்தகம் தொகுதிக்காக, செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பாலாற்றின் குறுக்கே படாளம்–உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆறு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, மொத்தமாக ரூ.1.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும். அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்; மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும்.
மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும். நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதி, மேலும் படித்த இளைஞர்களுக்காக ரூ.3 கோடியில் அறிவுசார் மையம் அமைப்பதும் அறிவிப்பில் இடம்பெற்றது.
தாராபுரம் தொகுதிக்காக, திருப்பூர் மாவட்டத்தில் காவிரியை ஆதாரமாகக் கொண்டு ரூ.1,439 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. வீடு இல்லாதவர்களுக்கு 2,700 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்; பாசன கால்வாய்களில் மண் திட்டுகளை அகற்றி தூர்வார ரூ.10 கோடியில் 159 பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும். மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்; தாராபுரம் நகராட்சியில் ரூ.6 கோடியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, ரூ.40 லட்சத்தில் தெருவிளக்குகள் நிறுவப்படும். 271 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால், கால்வாய் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.





