தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை நடத்தும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்த இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்களை மையமாக வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்ததாக கூறப்படும் நிலையில், அமைப்புக்குள் சிலர் தங்களை புறக்கணிப்பதாக இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அமைப்பினர் கூறுவதன்படி, அண்ணாமலைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ததும், போஸ்டர்கள் ஒட்டியும் செயல்பட்டதும் பல இளைஞர்களே. ஆனால் தனி அமைப்பு தொடங்கிய பிறகு, ஆரம்பகால தன்னார்வ இளைஞர்கள் ஓரங்கட்டப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிதாக பொறுப்பேற்ற சில நிர்வாகிகள் தங்களுக்கென தனி ஆதரவு குழுக்களை உருவாக்கி வருவதாகவும், அரசியல் அனுபவம் என்ற காரணத்தால் “பழைய முகங்களுக்கு” நிகழ்ச்சிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. கோவையில் நடைபெற்ற ‘டாக்டர் அப்துல் கலாம் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் சென்டர்’ தொடக்க விழாவிலும் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் அரசியல் ஆர்வத்துடன் அமைப்புக்குள் வந்த இளைஞர்கள் பின்வாங்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறும் அவர்கள், அண்ணாமலை உடனடியாக தலையிட்டு தன்னுடன் பயணித்த இளைஞர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் என்றும், அமைப்பின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இளைஞர்களுக்கும் உரிய பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.