மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுடில்லியில் விக்ரம்ஜீத் சிங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது விக்ரம்ஜீத் சிங் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா வெளியிட்ட பதிவில், துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ள இறைவன் மனவலிமை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் துணிச்சலும், போதைப் பரவலும் மாநில அரசின் செயல்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
பகவந்த் மான் தலைமையிலான ஆட்சியில், ஒருபுறம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும், மறுபுறம் இதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.
பஞ்சாப் உட்பட நாடு முழுவதையும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றவும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





