பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ள சண்டை மனப்பான்மை மற்றும் தலைவர்களைச் சுற்றியுள்ள வெளிப்படையான ஆதரவு காட்டும் போக்கை விமர்சித்தார்.

நடிகர் விஜயை சந்தித்தேன், கை கொடுத்தேன் என்று மகிழ்வது அல்லது அவரைப் பற்றி தவறாக பேசியவர்களுடன் இன்ஸ்டாகிராமில் சண்டை போடுவது போன்றவற்றால் எந்த பயனும் இல்லை என அவர் கூறினார். மற்றவருக்காக வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதும், கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் தேவையற்றது என்றார்.

சமூக வலைதளம் இன்று மிக மோசமாக மாறிவிட்டதாகவும், ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல் மாற வேண்டும்; தலைவர்களை உருவாக்கும் மாற்றத்திற்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் என்றும், தங்கள் பாதையில் தெளிவாக இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும், ஆளும்கட்சி யார் என்றாலும் அங்கே சென்று சமூக விரோதிகள் அடைக்கலம் தேடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

ஆளும்கட்சி நபர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று சிலர் நினைப்பதாகவும், ஆளும்கட்சியை சமூக விரோதிகள் ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.