ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார். இளைஞர்கள் அத்தகைய உள்ளடக்கங்களை விமர்சனமின்றி நம்பி பார்க்கும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் உரையாற்றிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்றும், அந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பதே நமது பாரம்பரியப் பண்பாடு என்றும் கூறினார்.

கடந்த ஓராண்டில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றின் நிறைவாக விஜயதசமி கொண்டாட்டத்திற்காக இங்கு கூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக அளவில் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

வரும் தலைமுறையினர் “வளர்ந்த பாரதத்தை” முன்னெடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்திய பாகவத், அதிகாரப்போட்டி அழிவை ஏற்படுத்தும் என எச்சரித்தார். அதிகாரம்கொண்ட ஹிந்து சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுவது நாட்டின் ஒற்றுமைக்கு முரணானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றே என்றும், இந்தியா எதைக் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, நம்மிடம் உள்ள அனைத்தும் இந்தியாவுக்கே உரியவை என்றும் அவர் கூறினார். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட பணிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.