பீஜிங்: உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தவும், உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொருளாதார மந்தநிலையைத் தடுக்கும் வகையிலும் சீன அரசு ரூ.3.52 லட்சம் கோடி மதிப்பிலான மானிய/தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் செலவழிப்பதில் காட்டும் தயக்கம் தொடர்வதால் உள்நாட்டு தேவை பலவீனமாகவே இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி துறை வலுவாக இருந்தாலும், பொருளாதாரம் சீராக இயங்க நுகர்வோர் வாங்கும் செலவு முக்கியம் எனக் கூறப்படுகிறது. சமீப காலத்தில் பலர் ஷாப்பிங்கை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்தியதால் சந்தையில் பொருட்கள் தேங்கும் நிலையும், உள்நாட்டு சில்லரை விற்பனை வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது.
இந்த தயக்கத்தை மாற்ற, பழைய மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாற்றி புதியவற்றை வாங்க ஊக்கமளிக்கும் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சுமார் 10.8 கோடி டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் மின்னணு பொருட்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி போன்றவற்றுக்கு 15% தள்ளுபடி வழங்கப்படும். மேலும், எரிசக்தி சேமிப்பு திறன் கொண்ட ஆறு வகை வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டில் மின்னணு பொருட்களின் விற்பனை உயர்ந்தாலும், முந்தைய அளவுடன் ஒப்பிடும்போது இன்னும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையிலும் உள்நாட்டு தேவை மந்தமாக இருப்பது சீன அரசுக்கு முக்கிய கவலையாக உள்ளது.





