தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் 18.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் அக். 22, 23 தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





