டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், ‘கரப்பான் கும்பல்’ தொடர்பான வழக்கில் ஆஜரான புதிய ஜாமின்தாரர்கள் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நீதிபதி விசாரணை நடத்தி போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கண்டறிந்து மனுக்களை நிராகரித்துள்ளார்.
வழக்கில், தலைநகர் டெல்லியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி அமைதியை குலைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவல் முடிந்த பின்னர் அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் அவர்களின் காவலை அக்.21 வரை நீட்டித்தது. இதற்கிடையில், குற்றச்சாட்டாளர்களுக்கு ஆதரவாக புதிய ஜாமின்தாரர்கள் ஆஜரான நிலையில், அவர்களின் தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்ற நீதிபதி ஜாமின்தாரர்களிடம் கேள்விகள் எழுப்பினார். அப்போது ஜாமின் பத்திரத்தில் உள்ள புகைப்படத்துக்கும் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்துக்கும் வெளிப்படையான முரண்பாடு இருப்பது தெரிய வந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர் தெளிவற்ற பதில்கள் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மற்றொரு ஜாமின்தாரர் சவுரவ் தாஸ் குறித்து பெற்றோர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களே தெரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. புதிய ஜாமின்தாரர்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை அக்.21 அன்று மீண்டும் நடைபெறுகிறது.





