தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை அறிக்கையின்படி, சுமார் 5.8 கி.மீ உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும், சுமார் 3.1 கி.மீ உயரத்தில் உள்ள சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை ஒரு தாழ்வு பாதையும் காணப்படுகிறது.

அக்.20 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.21 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.