கோவை: தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு ஆய்வுகளின்போது, அழுகக்கூடிய உணவுப் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் முறையில் பல இடங்களில் அலட்சியம் இருப்பது தெரியவந்ததாக மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பால், பன்னீர், இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்கள் உரிய தட்பவெப்ப நிலையில் (குறைந்த வெப்பநிலை) கொண்டு செல்லப்படாததால், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் வேகமாக பெருகி உணவு கெட்டுப்போகும் அபாயம் அதிகரிக்கும் என்றும், இது பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உற்பத்தி நிலையிலிருந்து விநியோகம் வரை முழு சங்கிலியிலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து வணிகர்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, சுத்தமான மற்றும் முழுமையாக மூடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்த வேண்டும்; வாடிக்கையாளரை சென்றடையும் வரை அனைத்து கட்டங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த வெப்பநிலையை கட்டாயமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தரமான பேக்கிங் உறைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சணல் பைகள் அல்லது சுகாதாரமற்ற சாக்குகளில் அடைத்து எடுத்துச் செல்லக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. துாசு, ஈரம், பூச்சிகள் ஆகியவற்றால் உணவுப் பொருட்கள் மாசடையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான ரசீதுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சோதனையின்போது உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்; மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து உடனடியாக அழிக்க வேண்டும் என எப்எஸ்எஸ்ஏஐ நிர்வாக இயக்குனர் டாக்டர் அமித் சர்மா உத்தரவிட்டுள்ளார்.




