ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறும் 5வது பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா முதல் நாளிலேயே 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றி வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது. 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியா 168 பேர் கொண்ட அணியுடன் களமிறங்கியுள்ளது.
பெண்கள் 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் (SH1) துப்பாக்கிச் சுடுதலில் மோனா அகர்வால் தகுதிச்சுற்றில் 629.1 புள்ளிகள் பெற்று, ஆசிய பாரா விளையாட்டில் அதிக புள்ளிகள் என்ற சாதனையைப் படைத்தார். பைனலில் 250.0 புள்ளிகளுடன் புதிய ஆசிய சாதனையோடு தங்கம் வென்றார். இந்தியாவின் அவனி லெஹரா 249.6 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றார்; தென் கொரியாவின் யுன்ரி லீ வெண்கலம் வென்றார்.
தடகளத்தில் பார்வை குறைபாடுள்ள பெண்கள் 1500 மீ. T12/13 பிரிவில் சவுமியா 5:12.39 நேரத்தில் (621 புள்ளிகள்) முதலிடம் பெற்று தங்கம் வென்றார். அதே பிரிவில் ராதா வெங்கடேஷ் 5:30.90 நேரத்தில் (421 புள்ளிகள்) வெள்ளி கைப்பற்றினார். பெண்கள் 1500 மீ. T11 பிரிவில் ராவன்னி 5:41.85 நேரத்தில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றார்.
களப் போட்டிகளிலும் இந்தியா தங்கம் சேர்த்தது. ஆண்கள் நீளம் தாண்டுதல் T47 பிரிவில் நிஷாத் குமார் 7.11 மீ. சிறந்த தாண்டலுடன் தங்கம் வென்றார். ஆண்கள் ஈட்டி எறிதல் F46 பிரிவில் ரிங்கு 65.11 மீ. எறிந்து தங்கம் கைப்பற்ற, அஜீத் சிங் 65.02 மீ. எறிந்து வெள்ளி பெற்றார்.
மற்ற பதக்கங்களில், ஆண்கள் 100 மீ. நீச்சல் S13 பிரிவில் ரவி கார்த்திக் புதிகினா 56.68 வினாடிகளில் வந்து வெள்ளி வென்றார். ஜூடோவில் பெண்கள் 52 கிலோ J2 பிரிவில் கோகிலாவுக்கு வெள்ளி கிடைத்தது; ஆண்கள் 70 கிலோ J1 பிரிவில் கபில் பார்மர் வெண்கலம் கைப்பற்றினார்.





