அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அனைவருக்கும் உரிமை என்றாலும், அது ஒழுங்காகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மஹாராஷ்டிராவில் போராட்டங்களுக்கு போலீசார் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில இடங்களில் அதிகமாக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மும்பையில் அமைதியாக போராட முயன்றவர்கள்மீது போலீசார் அத்துமீறி நடவடிக்கை எடுத்ததாகக் கூறி, வழக்கறிஞர் சவார் தேவ்ரே தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
நாட்டின் பல பகுதிகளில் “கரப்பான்பூச்சி” கட்சி நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மும்பையில் கடந்த வாரம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டது. இதில் பங்கேற்ற நான்கு பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அமர்வு, போராட்டக்காரர்களின் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் போல போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





