கடந்த டிசம்பரில் கையெழுத்தான இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீட்டை எளிதாக்க நியூசிலாந்து அளித்துள்ள உறுதிப்பாடு, உள்கட்டமைப்பு, உற்பத்தி, சேவைத் துறை மற்றும் புதுமை ஆகியவற்றை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என கூறினார்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பெரிய சந்தையை அணுகும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், விவசாய ஒத்துழைப்பின் கீழ் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒப்பந்தத்தின் கீழ் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் எனவும் தெரிவித்தார். மேலும், நாளை முதல் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.




