மாஸ்கோ: உக்ரைன்–ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடன் முத்தரப்பு பேச்சு நடத்தும் முன்மொழிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் நான்கரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் போர் முடிவுக்கு வரவில்லை; இரு தரப்பும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த யோசனையை புடின், டிரம்பிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரை நிறுத்துவது குறித்து மூவரும் பேச தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நவம்பர் 18, 19 தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ள ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் ஓரமாக இந்த சந்திப்பை நடத்தலாம் என புடின் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த பேச்சுக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை.