புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டத்தை 60 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், அந்த முடிவுக்கு இந்தியாவுடன் விரைவில் கையெழுத்தாகவுள்ள வர்த்தக ஒப்பந்த முயற்சியும் ஒரு காரணம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். நாளை மும்பை வரவுள்ள ரூபியோ, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அவர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகளின் பொருட்களுக்கு 100% வரை வரி விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இடைநிறுத்தினார்.

இதுகுறித்து ரூபியோ கூறுகையில், இந்தியா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என்றும், எரிசக்தி தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை ஒரே நாளில் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். உக்ரைன் போரும், சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களும் காரணமாக சர்வதேச எரிபொருள் விநியோகம் மற்றும் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தை ஆய்வு செய்ய 60 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளதாகவும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த முயற்சியும் இந்த வரி நிறுத்த முடிவில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் ரூபியோ தெரிவித்தார்.