சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தாராபுரம் இடைத்தேர்தல் காலத்தில் தவெக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை காரணமாக்கி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்றும், இது சகிப்புத்தன்மையற்ற மற்றும் ஜனநாயக உணர்வில்லாத போக்கை காட்டுவதாகவும் அவர் கூறினார். அரசின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பிய நாதக நிர்வாகிகளை கைது செய்து அலைக்கழிப்பதும் கொடுங்கோன்மை என விமர்சித்தார்.

ஜாமினில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகலாம் என எச்சரித்த அவர், அரசியல் பழிவாங்கலுக்கு காவல்துறை துணைபோகக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து கவனம் திருப்பவும், நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு துணைபோனவர்கள் வெளியில் சுற்றித் திரிகிறார்கள் என்றும் கூறினார்.

கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரினார். குற்றவாளிகளை காப்பாற்றி போராடுவோரை கைது செய்வதில் டெல்லி பாஜவும் தமிழகத்தில் தவெகவும் போட்டியிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.