தமிழ்நாட்டில் பருவமழையை எதிர்கொள்ள அரசு இயந்திரம் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய மழை பதிவுகளை குறிப்பிட்ட அமைச்சர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 6.2 செ.மீ. மழை பதிவானதாகவும், நீலகிரியில் சுமார் 2–3 செ.மீ. மழை பதிவானதாகவும் கூறினார். இதுவரை மழையின் தீவிரம் குறைவாக இருப்பதாக கலெக்டர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
நிலவரத்தை தினமும் ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். சென்னையில் 31 செ.மீ. மழை பெய்தபோதும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும், உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த செயல்பாடுகளை முதல்வர் பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், துறைவாரியாக மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். நவம்பர் முதல் வாரத்திற்கு பிறகு “சூப்பர் எல்நினோ” மாற்றம் உருவாகும் என புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும், இயற்கை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் பணிகளில்தான் அரசு கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.





