தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை தீவிரமடையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கைப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இந்த அமைப்பு எந்த திசையில் நகர்கிறது என்பதன் அடிப்படையில், வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தீவிரமடையுமா என்பது தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து, இதற்காக ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்து, சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று பதிவான மழையளவில் சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூர், பேராட்டுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பெய்ததாகவும், அதன்பின் திருவாடானை (ராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வடபாதிமங்கலம் (திருவாரூர்) பகுதிகளில் தலா 8 செ.மீ. பதிவானதாகவும் வானிலை மையம் தெரிவித்தது. இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானால், அக்.21 முதல் அக்.25 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.