சென்னை: நடிகர் தனுஷ் அரசியலில் கால் பதிக்க நினைத்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு இல்லாமல் சாதிப்பது கடினம் என பா.ஜ. தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் முன்னேறியதையடுத்து, பல நடிகர்களிடமும் அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போக்கில் தனுஷும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாகவும், அவரது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்கள் நல உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அரசியல் பயணம் குறித்து தனுஷ் தனது நண்பர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் இறுதியில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனுஷின் இல்லத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகி ஒருவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் முகாமிட்டுள்ள தனுஷ் பலரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலுக்கு வந்தால் முதல்வர் விஜயையும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.-வையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ. ஆதரவு தேவை என தனுஷ் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டில்லியில் பா.ஜ. தலைவர் நிதின் நபின் மற்றும் தமிழக பா.ஜ. பொறுப்பாளர் ராம் மாதவ் சார்பில் சிலர் தனுஷை சந்தித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த சந்திப்பில், தமிழ் சினிமாவின் செல்வாக்கை எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் என்ற வரிசையில் சொல்லலாம் என்றும், அவர்களுக்குச் சமமான மக்கள் செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்றும் பா.ஜ. தரப்பு கூறியதாக தகவல். ரஜினி விட்ட இடத்தை விஜய் பிடித்துள்ளார்; விஜயை எதிர்த்து அரசியல் செய்ய ரஜினியின் ஆதரவு அவசியம், இல்லையெனில் அரசியல் களத்தில் சாதிக்க முடியாது என்பதால் ரஜினியின் ஆதரவை பெற முயற்சி செய்ய வேண்டும் என தனுஷுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.





